Thursday, August 5, 2010

மற்றவர்களை விட புத்திசாலினு நெனச்சா இது தான் கதி



மதுரையில எப்போ என்ன நடக்கும்னு யாருக்குமே தெரியாது. போன வாரம் அப்படித்தான்.'நான் தான்டா பெரிய ஆளு' 'நமக்கு மேல் புத்திசாலி யாருமே இல்ல' னு ஊருக்குள்ள ஒருத்தர் சுத்திக்கிட்டு இருந்தாரு.சனங்க எல்லாம் வாய பொழந்துக்கிட்டு பாத்தாங்க அவர.ஏன்னா, அவர் இருந்தது மதுரை திமுக பெரிய இடத்துக்கிட்ட. 'நாய்சேகர்'"முட்டகோசு குமார்'"ஊத்து பாண்டி" ன்னு இருக்க மாதி இவருக்கு நெத்தியில இருக்க குங்கும பொட்டு தான் அடையாளம்.அவர பார்த்த தமிழ்நாட்டு அமைச்சருங்க அத்தன பேருக்கும் தொட நடுங்கும்.அமைச்சருங்களுக்கே அந்த கதின்னா...ஒக்காமக்கா, மதுரையில இருக்க அதிகாரிங்களுக்கு அவர் கொடுக்கற மருவாதய கேக்கவா வேணூம்!அவர் உத்தரவு போட்டா செஞ்சே ஆகணும்.

ஆனா...இப்பிடி மானம்,மருவாதயோட இருந்த அவர போன வாரம் நாலு,அஞ்சு பேரு சேந்து கும்மாங்குத்து குத்துனதுல இப்போ அவரு மதுரையில ஒரு ஆஸ்பத்திரியில படுத்து கெடக்குராரு.'எவ்வுளா அடிச்சாலும் நல்லா தாங்குரானேயா" என்ற வடிவேலு பட காமெடி மாதிரி, அவங்க அடிச்சப்ப இவர் கத்தாம இருந்தாதல வந்த வினை இது. சும்மா பிச்சு வாங்கி அனுப்பியிருக்காங்க நம்ம பொட்டு பார்ட்டிய. இதுல ஒரு விஷயம் தான் காமெடி. நம்ம பொட்டுக்கே இந்த கதின்னா, நம்மல்லாம் எந்த மூலைக்கு என்ற வெடவெடத்து போயிருக்கிறார்கள் மற்ற அல்லக்கைகள்.

ஜுனியர் விகடனில் இத பத்தி 3 ம் பக்கத்திலயே சும்மா புட்டு புட்டு வெச்சிருக்காங்க.

கதை சுருக்கம் படிங்க

ஜூ.விகடன் பேனர்:
மதுரை புள்ளி மடக்கம்

கதை:
கழுகார் - " யாரு என்னன்னு கேட்கப்படாது.மதுரை பொட்டுக்கார புள்ளிய சென்னைக்கு வரச்சொல்லி பின்னி பெடலெடுத்துட்டாங்களாம்". கடந்த வாரம் சென்னையிலிருந்து மதுரை பொட்டுக்கார புள்ளிக்கு போன் போனது. மறுமுனையிலிருந்து குரல்' உடனே கிளம்பி சென்னைக்கு வாங்க' என்று பொட்டுக்காரரிடம் சொல்ல, தயங்கிய பொட்டு 'நான் வரமுடியாது' என்று பதிலளித்தது. இதற்கு அடுத்து முதல்வரின் பாதுகாப்பு அதிகாரியிடமிருந்து வாஞ்சையான அழைப்பு பொட்டுப்புள்ளிக்கு போனது. பொட்டும் உடனே தனது 'சூப்பர்' நண்பருடன் கிளம்பி சென்னைக்கு போனார். அங்கு போனதும் முக்கிய அலுவலகத்தில் பொட்டு புள்ளியுடன் இருந்த சூப்பரை மட்டும் வெளியே உட்கார வைத்து விட்டு நாலைந்து வாட்டசாட்டமான நபர்கள் பொட்டுக்காரரை மட்டும் ஒரு இடத்திற்கு கூட்டிக்கொண்டு போனார்கள். என்ன நடந்ததோ தெரியவில்லை.'துவண்டு போய் வந்தார் பொட்டு' என்கிறார்கள். பொட்டை அழைத்து போன வாட்டசாட்டமான நபர்கள் போலீஸ்காரர்கள் என்று சிலரும், போலீஸ் மாதிரி என்றும் சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் பொட்டை அழைத்துச் சென்று பின்னிபெடலெடுத்து மதுரைக்கு அனுப்பி வைத்தது உண்மை. இப்படி பெடலெடுக்கும் போது 'அண்ணணுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியும்ல' என்று பொட்டு திமிற அந்த வாட்டசாட்டமான நபர்கள் அண்ணன் சொல்லி தான் இந்த பூஜையே நடக்குது என்று இன்னும் பூஜையை வலுவாக நடத்தினார்களாம்.

பொட்டின் பூஜை குறித்து மதுரை அதிகார மையத்திற்கு சூப்பர் நண்பர் பல தடவை போன் போட்டு சொல்ல முயற்சிக்க அந்த பக்கமிருந்து பதில் இல்லையாம்.

இது பற்றி அந்த வட்டாரத்தில் கேட்ட போது, மூத்தவரை திசைதிருப்பி பலர் சொகுசாக இருப்பதும், திமுகவின் முன்னாள் மதுரை சீனியர்கள் அதிமுகவுக்கு போகுமளவு வெறுப்படைய நேரிட்டதாகவும் ஆட்சி பீடத்திற்கு தகவல் போனதாம்.இதனால் தான் பொட்டுக்கு இந்த கவனிப்பாம். இது போல் மதுரையில் இன்னும் சிலருக்கும் சென்னைக்கு வரச்சொல்லி போன் போனதாம்.பயத்தில் அவர்கள் மறுத்து இப்போது போனை கேட்டால் அலறுகிறார்களாம்.

இது தான் அந்த செய்தி.

இதிலிருந்து தெரிய வருவது- " மற்றவர்களை விட புத்திசாலி என்று எண்ணுபவன் எப்போதும் ஏமாந்தே இருப்பான்".

தலைப்பு இப்பூடீஉம் வெக்கலாம்...."சேரக்கொடாத எடத்துல சேந்த வாங்க கூடாது எல்லாம் வாங்க வேண்டி வரும்"

Thursday, March 25, 2010

சென்னைக்கும், தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களுக்கும் என்ன வித்தியாசம்-கள ஆய்வில் மதுரை அமைப்பு


பறக்கும் ரயில், பளபளக்கும் சட்டசபை, மணக்கப்போகும் கூவம் என்று சென்னைக்கு திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஆனால் கரும்பலகையும், மேற்கூரையும் இல்லாத பள்ளிகளுடன், ரயிலைக்கூட ஆவென்று வாய்பிளந்து பார்க்கும் நிலையில் தான் இன்றைக்கும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வாழும் மக்களின் நிலை உள்ளது. இது என்ன தமிழகமா? என்ற அறைகூவலுடனும், மக்களை மின்வெட்டு என்ற பெயரில் கற்காலத்துக்கு தள்ளிய திராவிட கட்சிகளை அப்புறப் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் புதிய அமைப்பு ஒன்று மதுரையில் தொடங்கப்படுகிறது.

இலவசமாக வழங்கப்படும் கலர் டெலிவிஷன் பெட்டி போன்ற செய்கைகளால் தமிழர்களை முட்டாளக்கி வைத்திருக்கும் அரசியல் கலாச்சாரத்தில் இருந்து மக்களை மீட்டெடுக்க விருப்பதாக இந்த அமைப்பின் நிர்வாகியும், முதுகலை மருத்துவ பட்டதாரியுமான டாக்டர். மீனாட்சி சுந்தரம் கூறினார்.
இது பற்றி அவர் வெளியிடுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,


" அன்றைக்கு வடக்கு வாழ்கிறது.தெற்கு தேய்கிறது என்று சொல்லி ஆட்சிக்கு வநத திராவிட கட்சிகளுக்கு இன்று சென்னை மட்டும தான் தமிழ்நாடாக தெரிகிறது. சென்னை தவிர தமிழ்நாட்டின மற்ற மாவட்டங்கள் எல்லாம் தினமும் 4 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருட்டில் திண்ட்ாடுகின்றன. இதனால் சிறு, குறு தொழில்கள் எல்லாம் இழுத்து மூடப்பட்டு பலர் வேலை இழக்கும் அபாயம் தோன்றியிருக்கிறது. இத்தனை காலம் இவர்கள் ஆட்சி செய்து மக்களுக்கு கிடைத்த பலன் தான் என்ன?
தாங்கள் ஆட்சி செய்யும் சென்னையில் மட்டும் பறக்கும் பாலங்கள், பல வகையான சுரங்க பாதைகள்,பறக்கும் ரயில்கள்,புறநகர் மின்சார ரயில்கள், சாக்கடையை மணக்க வைக்க பல ஆயிரம் கோடியில் திட்டஙகள், பல்வேறு பல்கலைக்கழகங்கள், கார் உற்பத்தி நிறுவனங்கள், தடையில்லா மின்சாரம் என்று அத்தனை வசதிகளையும் செய்து கொண்டு வருகிறார்கள்.


ஆனால் தமிழ்நாட்டின் மற்ற பல மாவட்டஙகளில் இன்று சரியான சாலை வசதிகள் இல்லை. புறநகர்களில் மாட்டு வண்டிகளும், ஆட்டு மந்தைகளை போல் ஆட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள் தான் போக்குவரத்து வசதிக்கான ஏற்படாக உள்ளன. பல கிராமங்களில் இன்றும் சாலை வசதி இல்லை. கரும்பலகையும், மேற்கூரையும் இல்லாத ஒர் ஆசிரியர் பள்ளிகளில் பரிதாகமாக தமிழ் குழந்தைள் படிப்பது மனதை நெருட வைக்கிறது. இந்த மாவட்டங்களில் விளைநிலங்களும், நீர் நிலைகளும் சூறையாடப்பட்டு வருகின்றன. இதையெல்லாம கேட்பது யார்? தமிழ்நாட்டின் பட்ஜெட்டில் 50 சதவீதம் வரை சென்னைக்கு செலவிடப்பட்டு வருகிறது.

சென்னையில எத்தனை சதவீதம் தமிழர்கள் வசிக்கிறார்கள்? இவர்களுக்கு சொகுசு பண்ணி தருவதற்கு எதற்கு தமிழ்நாட்டின் மற்ற மாவட்ட மக்களின் வரிப்பணம் செலவிடப் பட வேண்டும்? தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலை எந்த அளவு மோசமான நிலையில் உள்ளது என்பதை பற்றி ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறினார். படித்த தமிழ் இளைஞர்கள் கலந்து தகவல் தொடர்பை பயன்படுத்தி எங்களுக்கு ஆலோசனை தரலாம். தமிழ் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாக டாக்டர்.மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார். வரும் சனிக்கிழமையன்று மதுரையில் மண்ணின் மைந்தன் பழ.நெடுமாறன் அவர்கள் இந்த அமைப்பை தொடங்கி வைக்கிறார். பல்வேறு சமூக சிந்தனையாளர்கள், அமைப்புகள் இந்த விழாவில் கலந்து கொள்கின்றன.


இந்த அமைப்பில் தமிழ்பத்திரிகையாளர்கள், சூழல் சிந்தனையாளர்கள், மொழி அறிஞர்கள், சமூக சிந்தனையாளர்கள் என்று சமூகத்தின அனைத்து தளத்திலும இருந்து ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் தெரிவித்தார். சாதி, மத அமைப்புகளில் இடம் பெறுவோருக்கு இந்த அமைப்பில இடமில்லை. தமிழர்களை முட்டாளாக்கும் அரசியல் கலாச்சாரத்திடமிருந்து மீட்டெடுக்க விரும்பும் அனைவரும் உலகம் முழுவதிலும் இருந்து தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்றார் இவர். டாக்டர்,மீனாடசி சுந்தரம், எம்,பி,பி,எஸ், எம்,டி, தொலைபேசி எண்- 094420 24446

Monday, February 1, 2010

அழகிரி அண்ணனை ஆற்றில் இறக்கிய அல்லக்கைகள்


விழவு மலிமூதூர் என்ற பெயர் மதுரைக்கு உண்டு. காரணம், மதுரையில் தினமும் ஏதாவது விழாக்கள் நடந்து கொண்டே இருக்கும். விழாக் கொண்டாட்டங்களால் மதுரை நகரம் களை கட்டி இருக்குமாம். இப்படி விழாக்கள் மலிந்து இருந்த ஊரால் விழவு மலிமூதூர் என்று மதுரையை சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இப்படி நடக்கும் விழாக்களில் சித்திரை மாதத்தில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு புகழ்பெற்றது. பெருமாள் ஆகிய அழகர் தனது தங்கையான மீனாட்சியின் திருமண விழாவைக் காண மதுரையின் வடக்குதிசையிலிருக்கும் அழகர் மலையில் இருந்து கிளம்பி மதுரையின் தெற்கு பக்கத்திலிருக்கும் கோயிலுக்கு குதிரையில் வருகிறார். வடக்கையும், தெற்கையும் நடுவில் ஓடும் வைக ஆறு பிரிக்கிறது. இந்த ஆற்றை கடக்கும் போது அழகர் உடுத்தியிருக்கும் ஆடையின் நிறத்தை கொண்டு தான், அந்த ஆண்டு நாட்டில் நல்ல மழை பெய்து செழிப்பு ஏற்படும்.
உதாரணமாக அழகர் தங்ககுதிரையில் அமர்ந்து பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினால் அந்த ஆண்டு நல்ல மழை பெய்து பயிர்கள் விளைந்து செழிக்கும் என்பது ஐதீகம். சிவப்பு பட்டு உடுத்தி இறங்கினார் என்றால், வறட்சி வரப்போகிறது என்று பொருள்.

இப்படி இருக்கும் நிலையில், அழகருக்கு பதிலாக தை மாதத்தில் அழகிரி ஆற்றில் இறங்கும் வைபவம் மதுரையில் நடைபெற்றது. அழகிரியின் அல்லக்கைகள் இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தனர். அல்லக்கைகளின் வருமானம் செழிக்க வேண்டும் என்பதற்காக, அழகிரி பச்சை பட்டு உடுத்தி ஆற்றில்???(திருமண மண்டபத்தில் நடந்த விழாவில்) இறங்கினார். விளைவு அல்லக்கைகள் காட்டில் மழை.

Saturday, January 30, 2010

குடும்ப பாசம் இப்படி தான் இருக்கணும் -கலைஞர் பேரன் சினிமாவுக்கு தயாளு அம்மாள் பூஜை


கலைஞர் மேடையில் தொண்டை தண்ணி வற்ற பேசி கட்சியை வளர்த்தது ஒரு காலம். அவரது குடும்பம் அதே தமிழ் மக்கள் சேவையை நவீனமாக செய்யும் காலம் இது.

Wednesday, January 27, 2010

அழகிரி அண்ணணுக்குஅல்லக்கைகளின் சேர்க்கை தேவையா?

உண்மையிலேயே எனக்கு மத்திய அமைச்சர் அழகிரி மீது எந்த கோபமும் இல்லை. நேரில் சந்தித்து பழகியவர்கள் சொன்னது, அண்ணனை சிலர் தங்கள் கொள்ளைக்கு வசமாக பயன்படுத்துகிறார்கள் என்பது தான். அது உண்மையா, இல்லையா என்பது தெரியாது. ஆனால்அண்ணன் நினைத்தால் எதுவும் நடக்கும் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். அவ்வளவு சக்தி வாய்ந்த அண்ணணுக்கு, எந்த வகையிலும் ஒத்து வராத இந்த கொள்ளைகும்பலின், அல்லக்கைகளின் சேர்க்கை தேவையா என்பது தான் மதுரை மக்களை ரொம்பவும் குழப்புகிறது.
இந்த கொள்ளைக்கும்பல் என்பது ,மதுரையில் அண்ணனின் ஆசிர்வாதத்தால் மூச்சா மற்றும் ரெண்டுக்கு போகும் கக்கூஸ் காண்ட்ராக்டுகள், மாநகராட்சி சாக்கடை தோண்டும் வேலைகள் , சைக்கிள் ஸ்டாண்டுகள், கந்து வட்டி கொடுத்து வாங்கும் அறிவு பூர்மான வேலை செய்யும் அறிவுஜீவிகள் போன்ற கழக கண்மணிகள் தான். அண்ணனை சுற்றி அரணாக இருப்பவர்களும் இந்த அல்லகைகள் தான். .
வரும் 30 ம் தேதி அண்ணன் பிறந்த நாள் . இதனை வைத்துக் கொண்டு இந்த அல்லக்கைகள் ஆடும் ஆட்டம் இருக்கிறதே....ஆத்தாடியோவ்....மதுரையே பொளந்து போகாதது தான் பாக்கி.
இன்று காலை மதுரை ரோடுகளில் வெள்ளை மினிஸ்டர் சட்டையில் ஆங்காங்கே கடப்பாரை, தட்டுகளுடன் ஆட்களை அழைத்துக் கொண்டு வந்தது இந்த அல்லக்கை கூட்டம். தமிழ் சினிமா பட ரவுடி தோற்றத்தில் இருந்த இவர்களை பார்த்து மதுரை பொதுசனம் மிரண்டு போனது. என்னவோ, ஏதோ என்று திகைத்தது. வந்தது வழக்கமாக அண்ணனின் அல்லக்கைகள். யார் வந்தால் என்ன.. போனால் என்ன என்று வந்திருந்த அல்லக்கைகள் ஆட்களை ஏவி மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி குழியை தோண்டினார்கள் . ஏதோ..அம்மன் கோயிலுக்கு காம்பவுண்ட் சுவர் கட்டத்தான் போகிறார்கள் என்று எல்லா பொதுசனமும் வேடிக்கை பார்த்தது. ஏனென்றால் மதுரையில் எப்போது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

இப்படி வேலை நடந்து கொண்டிருக்கும் போதே, எஙகிருந்தோ வந்த அண்ணனின் மேலும் 10 அல்லக்கைகள், கைகளில் 20 அடிநீளத்தில் வைத்திருந்த இரும்பு கம்பிகளில் கோர்த்த திமுக கொடிகளை அந்த குழிகளில் 5 அடிக்கு 5 அடி தூரத்தில் தோண்டப்பட்ட குழிகளில் நட்டு வைத்து விட்டு சிட்டாக பறந்தார்கள். அப்படியே கோயிலை சுற்றியிருந்த கீழமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி, தெற்குமாசி வீதி உள்பட மதுரையின் முக்கிய இடங்களில் எல்லாம் இப்படி குழியும், அதில் திமுக கொடியுமாக பறக்கிறது.
ஒரே சீராக மதுரை ரோடுகளில் இருமருங்கிலும் நடப்பட்டிருந்த கொடிகளை கண்டு மதுரை மக்கள் புளகாஙகிதம் அடைந்தார்கள். காரணம்,
வழக்கமாக மதுரை ரோடுகளில் நாய்கள், கழுதைகள், பன்றிகள் எல்லாம் குறுக்கும் நெடுக்குமாக ஒடும்.

வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி விட்டு போயிருப்பார்கள். பேய்களை தவிர வண்டியை ஓட்டுபவரின் குறுக்கே எதுவெல்லாம் பாயும் என்று தெரியாது. மிரண்டு போய் வண்டியின் ஓட்டத்தை தவறவிடுபவர்களை பிறகு 108 ஆம்புலன்ஸ் வந்து தூக்கி கொண்டு போகும். தப்பாக நினைக்க கூடாது. சப்இன்ஸ்பெக்டர் வெற்றிவேலுக்கு மட்டும் தான் இந்த 108 ஆம்புலன்ஸ் வராது.
வழக்கமாக இப்படி காணப்படும் மதுரை ரோடுகள் நேற்று முதல் திமுக கொடிகளை சுமந்து கொண்டு பார்க்க அழகாக காட்சி தருகிறது.

ரோட்டின் இருபக்கத்திலும் சீராக கொடிகளை நட்டிருப்பதால், வழக்கமாக குறுக்கே ஓடும் நாய், நரி, குதிரை, கழுதைகள், மாடுகள் எல்லாம் 20 அடி நீள திமுக (சிவப்பை கண்டால் விலங்குகள் பொதுவாக வெறிக்கும்) கொடிகளை பார்த்து மிரண்டு போய் எங்கோ பதுங்கி கொண்டன. வழக்கமான தாறுமாறாக வாகனங்களை ஓட்டும் வாகன ஒட்டிகள் வண்டிகளை சீராக ஓட்ட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். வண்டிகள் சீராக சென்றதால் வழக்கமாக காதைப்பிளக்கும் ஆரன் சத்தம் இல்லை.
மொத்தத்தில் மக்கள் நிம்மதியாக பயணம் செய்தார்கள். அதானே....அண்ணன் செஞ்ச எதிலயும் ஒரு அர்ததமிருக்குமில.....என்று இரண்டு கைத்தடிகள் பேசிக்கொண்டார்கள். அண்ணனை இந்த மதுரைக்கு பெற்று கொடுத்த கலைஞர் ஐயா பல்லாண்டு வாழ மீனாக்ஷி அம்மனை வாழ்த்தி போற்றினார்கள்.

( குறிப்பு ) நான்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் கழக பொருளாளர் பதவி தனக்கு தரப்படவேண்டும் என்பது அண்ணனின் கோரிக்கை.அது நிறைவேற தனது பலத்தை காட்ட வேண்டிய கட்டாயத்தில் அண்ணன் இருப்பதாக ஜூனியர் விகடனில் சொல்லிவைத்தார்கள் .கிளம்பியது அண்ணன் படை.சீரானது மதுரை போக்குவரத்து. வாழ்க அண்ணன் தொண்டு .வளர்க அவரது திருப்புகழ்.இம்புட்டு தாங்க விஷயம்.